கர்நாடக மாநில எல்லையில், கக்கநல்லா சோதனைச்சாவடி உள்ளது. நேற்று (மே.24) கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது காய்கறிகள் ஏற்றி வந்த வாகனத்தில் கெட்டுப்போகாத 165 டெட்ரா பால் பாக்கெட்டுகளுடன் 206 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் வந்த சஜின்தேவ், நாராயணன் ஆகிய இருவரைப் பிடித்த காவல் துறையினர், அவர்கள் கடத்திவந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த மசினக்குடி காவல் துறையினர், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். கர்நாடகாவிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யக் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலி; ஹுன்டாய் தொழிற்சாலைக்கு 5 நாள்கள் விடுமுறை