நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில், கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈளாடா பகுதியில் இரட்டை புலிகள் கடந்த சில நாட்களாக சுற்றி திரிய தொடங்கி உள்ளன.
பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் இந்த புலிகள் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சாதாரணமாக உலா வருகின்றன. பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலேயே புலிகள் அடிக்கடி நடமாடுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேயிலை தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த இரட்டைப் புலிகள் கடந்த சில தினங்களில் அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி உள்ளன.