நீலகிரி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கபட்டுள்ளன. இதனையடுத்து ஆதிவாசி மக்கள் அந்தந்த பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உதகை அடுத்துள்ள உல்லத்தி ஊராட்சிமன்றத் தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கபட்டுள்ளதை அடுத்து முத்தநாடு மந்து பகுதியைச் சார்ந்த பிரசாத் என்ற தோடர் இனத்தவர் ஒருவர், உதகையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் ஏராளமான தோடர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து, உதகையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்த பிரசாத்தை தோடர் இன மக்கள் புடைசூழ வாழ்த்து தெரிவித்தவாறு அழைத்துச் சென்றனர். இது அங்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.