மலை மாவட்டமான நீலகிரியில் இருளர், பனியர், குறும்பர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 30 ஆயிரம் பேராக இருந்த அவர்களது எண்ணிக்கை, தற்போது 27 ஆயிரமாக குறைந்துள்ளது. அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் இந்த பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளது.
குறிப்பாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பந்தலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சோலாடி பழங்குடியின கிராமத்தைச் சார்ந்த 41 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது.
அதனையடுத்து சுகாதார துறையினர் பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஊட்டி அருகே உள்ள ஆனைக்கட்டி, சிறியூர், சொக்கநள்ளி உள்ளிட்ட இருளர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட சென்றனர்.