கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இருந்தபோதிலும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தாலிச் சங்கிலியை அடகுவைத்தும், வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருந்த கால்நடைகளை விற்றும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்டவற்றை வாங்கிய பெற்றோர் குறித்த செய்திகளை நம்மால் அறிய முடிகிறது. தங்கள் பிள்ளைகளின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால் இதுபோன்ற செயல்களை மாணவர்களின் பெற்றோர் செய்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியாத சூழல் நிலவுகிறது. ஏனென்றால், நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுப்புற பகுதிகளான குரும்பாடி, கோழிக்கரை, புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் டவர்கள் கிடையாது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் வீடுகளில் டிவியும் கிடையாது.