நீலகிரி: உதகை அருகே உள்ள எம்.பாலாடா பகுதியில் பிரபல சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் படித்து வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்புத் துறை பணியில் எளிதில் சேர்வதற்கான அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மலையேற்ற பயிற்சிகளை முடித்த மாணவர்கள் இமாச்சல், காஷ்மீர் போன்ற மலைப் பிரதேசங்களில் இரண்டு மலைகளுக்கு இடையே கயிறு மூலம் கடந்து செல்வது, செங்குத்தான மலைகளில் ரோப் கயிறு மூலம் ஏறுவது போன்ற சாகசங்களைத் தத்ரூபமாகச் செய்து காண்பித்தனர்.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி காமாண்டெண்டும், லெப்டினன்ட் ஜென்ரலுமான வீரேந்திர வட்ஸ் முன்னிலையில் இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 100 அடி உயரத்தில் ரோப்பில் தொங்கிய படி 100 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சென்று வருதல், கீழே இறங்கி ஏறுதல் என பல்வேறு சாகசங்களைச் செய்து அசத்தினர்.
இது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ஈக்கோ ஸ்டேரின் எனப்படும் குதிரை சாகசங்களும் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பாகச் செய்து அசத்திய மாணவர்களுக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட் வீரேந்திர வட்ஸ் கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க:கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூவர் விஷவாய்வு தாக்கி உயிரிழப்பு