நீலகிரியில் திருநங்கையின் முதல் தள்ளுவண்டி கடை திறப்பு நீலகிரி:திருநங்கைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தொழில் தொடங்க மானியம், 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டைகள், மாநில மற்றும் தேசிய அடையாள அட்டை என திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், தமிழக அரசின் மானியம் மூலம் நீலகிரியில் முதன்முதலாக திருநங்கைக்கு தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டு உள்ளது. குன்னூர் ஓட்டுபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை லட்சுமி. இவர் பல ஆண்டுகளாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமோசா செய்து வீடு வீடாக விற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கான உதவி திட்டத்தின் கீழ், தள்ளுவண்டி கடை திறக்க சமூக நலத்துறை நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் நீலகிரியில் முதன்முதலாக திருநங்கையின் தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் பிரவீனா தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்தனர். இதில் திருநங்கை லட்சுமி கூறுகையில், “கடந்த 18 ஆண்டு காலமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில், சமோசா செய்து தலை சுமையாக தூக்கி வீடு வீடாக சென்று வியாபாரம் செய்து வந்தேன்.
தற்போது தமிழக அரசு சார்பில், திருநங்கைக்கான சுயதொழில் திட்டத்தின் கீழ் எனக்கு தள்ளுவண்டி கடை வைத்து கொடுத்துள்ளதால், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசுக்கு மிக்க நன்றி. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த முறையில் வியாபாரம் செய்து, மேலும் ஒரு கடை திறக்க முயற்சி செய்வேன்” என்று தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தீபாவளி விற்பனையில் களைகட்டும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்… உள்நாடு டூ வெளிநாடு ஏற்றுமதி என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!