கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழையால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.
பாதுகாப்பு காரணங்களால் பல குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு வழியாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், கள்ளிக்கோட்டை மாவட்டம், கண்ணனூர் மாவட்டங்களுக்கு நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி என்னும் மலை பாதை வழியாகதான் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழ்நாடு எல்லையான நாடுகாணி சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் நடுவே 10 மீட்டர் நீளத்திற்கு பிளவு ஏற்பட்டு சாலையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது .
நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 9) லேசான சரிவு இருந்த நிலையில் நேற்று(ஆகஸ்ட் 10) வந்த அந்த பிளவு அதிகரித்து சரிவும் அதிகரித்துள்ளது.
இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரு மாநில போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சரக்கு லாரிகள் முதல் அனைத்து வாகனங்களையும் இரு மாநில அரசுகளும் நிறுத்தியுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் சரிவுகள் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடிவாரத்தில் உள்ள யானைமரி கிராமத்தை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை கேரள அலுவலர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு உள்ள பள்ளிகளில் தங்க வைத்துள்ளனர்.
இந்த வாகன போக்குவரத்து நிறுத்தம் காரணமாகக் கேரளாவில் உணவு பொருள்கள் தட்டுபாடு ஏற்படுவதுடன் பொதுவாக தேயிலை தூள் காய்கறிகள், கர்நாடகாவில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு செல்ல இந்த சாலை பயன்படுத்தப்படுகிறது. தற்போது இவை அனைத்தும் தடைப்பட்டுள்ளது.