குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து..! நீலகிரி:ஊட்டியிலிருந்து காலி கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீ பற்றியதால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பதற்றம் ஏற்பட்டது. இந்தியன் கேஸ் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான கேஸ் சிலிண்டர் ஏற்றிச் செல்லக்கூடிய லாரி காலி சிலிண்டர்களுடன் இன்று கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில், லாரி குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பர்லியார் அருகில் சென்று கொண்டிருந்த போது பின் பக்கத்தில் திடீரென புகை வந்த நிலையில் தொடர்ந்து தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் இதனைப் பார்த்து உடனடியாக லாரி ஓட்டுநரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் நடந்த சேசிங்.. கஞ்சா கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த காவல்துறை!
இதன் பின்னர், லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திய உடன் லாரியின் சக்கரம் மளமளவென எரியத் தொடங்கியது. இந்நிலையில், உடனடியாக அந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், பெரிய விபத்து ஏதும் ஏற்படாமல் தீயை விரைந்து அணைத்தனர். இதனால், சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டது.
இதையும் படிங்க: நிவாரணத் தொகை பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்.. மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!