மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து நீலகிரி : ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுலா வந்த மினி பேருந்து குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், உதகை சுற்றுலா பகுதிக்கு, இராமேஸ்வரம் மண்டபம் அருகே வேதாளை பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் மினி பேருந்தில் சுற்றுலா வந்து உள்ளனர். இந்நிலையில் இவர்கள் நீலகிரியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பேருந்து குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் அருகே மரப்பாலம் பகுதியில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிபாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை தான் திமுகவுக்கு திரும்பம் தந்தது.. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அதனைத்தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களை காவல் துறையினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்தில் பயணித்தவர்கள் உயிர் சேதம் இல்லாமல், லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் விபத்து ஏற்பட்டதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த மாதம் இதே பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 1,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு! சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!