நீலகிரி: தென்காசியில் இருந்து 2 ஓட்டுநர்கள் உடன் 57 பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து ஊட்டியில் இருந்து நேற்று (செப். 30) தென்காசி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்து நிலையில், மாலை 5.15 மணியளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 9வது கொண்டை ஊசி வளைவின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து இது குறித்து அறிந்த மீட்புப் படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கூடுதல் உதவி காவல் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலைத்துறை காவல் துறையினர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதனை அடுத்து, மீட்கப்பட்டவர்கள் கோவை மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், குன்னூர் அரசு மருத்துவமனையில் முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (வயது 64), தேவிகலா (42), கௌசல்யா (29) மற்றும் நிதின் (15) உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்காசி மாவட்டத்தில் இருந்து ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்குச் சென்றவர்கள் தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில், பேருந்தில் பயணம் செய்த எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.