நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்திபுரம் அருகே குன்னூரில் இருந்து கீழ்நோக்கி வந்த இருசக்கர வாகனம் சுற்றுலாத்துறை அமைச்சரின் கார் மீது மோதியதில் இரு சக்கர வாகன ஓட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் அவரது உதவியாளர், ஓட்டுநர் என அனைவரும் இன்று (டிச.07) அமைச்சரது காரில் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் குன்னூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அசாருதீன் (30) மற்றும் சுபையா பானு (22) என்ற தம்பதியினர் ஊட்டிக்குச் சென்றுவிட்டு மீண்டு திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் அசாருதீன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அமைச்சரின் காரில் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அசாருதீனுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவரது மனைவி சுபையா பானுவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.