நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் பயன்பாட்டில் இல்லாத கழிவறை கட்டடத்தை நகராட்சி அலுவலகம், கலைக்கூடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில் தஞ்சாவூர் கைப்படக் கலைஞர் மணிவண்ணன் நாகாலாந்து மாநிலத்தில் எடுத்த பழங்குடியின மக்களின் புகைப்படங்களைக் காட்சிபடுத்தினார்.
இந்தப் புகைப்படக் கண்காட்சியை நேற்று (டிச.21) திறந்து வைத்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, அங்கிருந்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சி தொடர்ந்து இருபது நாள்கள் நடைபெறும்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஊட்டியில் பயன்படுத்தப்படாத கழிப்பறை கட்டடம் ‘தி கேலரி ஒன்டூ’ என்ற கலைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத அந்தக் கழிவறைக் கட்டத்தை நகராட்சி கேலரியாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்றலாம்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகாலாந்து பழங்குடியினர்களை பாலின பேதமின்றி அவர்களது பாரம்பரிய உடையில் மணிவண்ணன் புகைப்படமெடுத்துள்ளார். இதன் மூலம் பழங்குடியினரின் கலாசாரம், பண்பாட்டு முறைகளை அறியமுடிகிறது.
இந்த நிகழ்வையொட்டி, தானியங்கி நூலகத்தையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார். இந்த நூலகத்தின் சிறப்பே இங்கு ஒரு புத்தகத்தை நாமாகவே எடுத்துக்கொண்டு வேறொரு புத்தகத்தை வைக்கலாம். கண்காணிப்பாளர்கள் எவரும் கிடையாது.
இதையும் படிங்க:காலத்தை வென்ற கணிதமேதை ராமானுஜன்!