புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய பழனிசாமி - பழனிசாமி அடிக்கல் நாட்டுதல்
நீலகிரி: உதகமண்டலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், 2019-ஆம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருந்தது.
அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அந்த வகையில், 11ஆவது மருத்துவக் கல்லூரியாக நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு பழனிசாமி இன்று( ஜூலை 10) காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 447 கோடியே 32 லட்சம் ரூபாய் அனுமதித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக 130 கோடி ரூபாய் நிதியுடன், கட்டடங்கள் கட்டுவதற்காக கூடுதலாக 122 கோடியே 32 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் 110 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால் 50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 141 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 130 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 175 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும். நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கான இடமாக அமைய உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி துணை இயக்குநர் டாக்டர் சபிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.