நீலகிரி:வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில் வனப்பகுதியில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வனப்பகுதியில் செல்லும் சாலைகளில் கடந்து செல்லும் வாகனங்களையும் போலீசார் பரிசோதனை செய்கின்றனர். வனவிலங்குகள் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், மின்வேலிகள், சாலை விபத்துகள், மனிதர்களால் வேட்டையாடப்படுவது போன்றவற்றால் வனவிலங்குகள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் நீலகிரி, சேரம்பாடி அருகே சோலாடி சோதனைச் சாவடியில் போலீசார் வகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் இருந்து நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி வழியாக வைத்திரிக்கு சென்ற KL.46.B.5833 என்ற பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு அவர்கள் மேல் சந்தேகம் அதிகரித்தது. இதனால் போலீசார் காரில் சோதனை நடத்தினர்.
அப்பொழுது அவர்கள் வந்த காரின் டிக்கியில் ரத்த கசிவு காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் டிக்கியை திறந்து பார்த்த போது உள்ளே உயிரிழந்த நிலையில் ரத்தம் வழிந்த படி ஒரு சாக்கு பை இருந்துள்ளது. அந்த சாக்குப் பையைத் திறந்து பார்த்த போது அதனுள்ளே ஒரு முள்ளம்பன்றியின் உடல் இருந்துள்ளது.