நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக உணவைத் தேடி காட்டெருமை வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், எடப்பள்ளி பகுதியில் கடந்த 21 நாள்களாக காலில் குழாய் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில், காட்டெருமை ஒன்று குடியிருப்புப் பகுதியில் உலா வந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து விரைந்து வந்த முதுமலை உதவி கால்நடை மருத்துவ அலுவலர் கோச்சாலன் துப்பாக்கி மூலமாக காட்டெருமைக்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தினார். அதன்பின், நீண்ட நேரத்திற்குப் பிறகு மயக்கமடைந்த காட்டெருமைக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலில் இருந்த பிளாஸ்டிக் குழாயும் அகற்றப்பட்டது.