நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தங்காடு பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மலைக் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சில நாள்களாக இருந்து வந்துள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே மலைக் காய்கறி தோட்டம், கிராமப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (மார்ச்9) மாலை சிவகுமார் என்ற விவசாயி மலை காய்கறி தோட்டத்தில் நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், மறைந்திருந்த சிறுத்தை இவரைத் தாக்கியது. அப்போது அருகில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதனால், சிறுத்தை வனப்பகுதிக்கு ஓடிச்சென்று விட்டது. பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தங்காடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளித்தனர். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உதவி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.
சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த சிவகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களை அச்சுறுத்தி வரும் இந்தச் சிறுத்தையை வனப்பகுதியில் விரட்டவும், கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:திருமணத்திற்கு பெண் பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு: தந்தையை கொன்ற மகன்