நீலகிரி மாவட்டம் உதகை அருகே நடுவட்டம் பகுதியில் வனப்பகுதியை ஆக்கிரமித்து, கவிதா செண்பகம் என்பவர், 'ரிசார்ட்' கட்டுவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கூடலுாரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த முதன்மை அமர்வு, வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தனர். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும், வனத்துறை அலுவலரும் அந்த பகுதியை ஆய்வு செய்து வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யுமாறும், அதுகுறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.