தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

T23 புலியின் நிலை என்ன?... முதன்மைத் தலைமை வன பாதுகாவலர் பிரத்யேக பேட்டி - Chief Wildlife Conservator

நீலகிரி மசினகுடி பகுதியில் கடந்த 11 நாட்களாக வன அலுவலர்களிடம் சிக்காமல் போக்கு காட்டி வரும் T23 புலி, ஆட்கொல்லி புலி இல்லை என்றும், ஆட்கொல்லி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

T23 புலி ஆட்கொல்லிப் புலி இல்லை
T23 புலி ஆட்கொல்லிப் புலி இல்லை

By

Published : Oct 6, 2021, 6:18 PM IST

Updated : Oct 6, 2021, 7:30 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (51) என்பவரை செப்டம்பர் 24 ஆம் தேதி T23 என்று பெயரிடப்பட்ட புலி அடித்துக் கொன்றது. இதுவரை நான்கு பேரை இந்தப் புலி கொன்றுள்ளது. புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டதாகவும், அதனால், புலியைப் பிடிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் வலியுறுத்தலையடுத்து வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்படி தொடங்கிய இந்த பணி இன்றும் (அக்.6) 12ஆவது நாளாகத் தொடர்கிறது.

புலியைத் தேடும் பணி தொடர்ந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி புலியைச் சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அதற்கு மறுநாள், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

புலியின் இருப்பிடத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, "நீலகிரியில் தேடப்பட்டுவரும் புலியைக் கொல்ல வேண்டாம். புலியைப் பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு கூடாது" என்று உத்தரவிட்டார்.

சிங்காரா பகுதியில் கண்காணிப்பு

இதையடுத்து இன்று (அக்.6) T23 புலியைப் பிடிக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், " புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதற்கேற்றவாறு நாள்தோறும் புதிய யுக்திகளை மேற்கொண்டு புலியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ட்ரோன் கேமரா மூலம் புலி நடந்து சென்ற இடம், தற்போது இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வருகிறோம். புலி இடம்பெயர்வதால் அதை பிடிப்பதில் சிரமம் உள்ளது. புலியை தேடும் பணியில் முதல்முறையாக மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டது.

புலியின் பாதுகாப்பு, பொதுமக்கள், வன அலுவலர்கள், மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் புலியைப் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. புலிக்கு வயதாகிவிட்டதால் அது நேரடியாக இரையை வேட்டையாடுவதற்கு வாய்ப்பு குறைவு.

சிங்காரா பகுதியில் நேற்று (அக்.5) புலி நடமாடிய தடயங்கள் தென்பட்டதால், அங்கு மரத்தின் மீது நான்கு பரண்கள் அமைத்து மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் குழுவாகக் கண்காணித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளப்படுகிறது. மற்ற பகுதிகளில் 6 குழுக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இருவரைக் கொன்றதற்கு ஆதாரம்

வெடி வெடிப்பது, சத்தம் எழுப்புவது போன்ற பழைய யுக்திகளை மேற்கொள்ளாமல் அறிவியல் பூர்வமான வியூகங்களை அமைத்து தேடி வருகிறோம்.

புலி இருவரைக் கொன்றதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. T23 புலி ஆட்கொல்லி புலி இல்லை, அது ஆட்கொல்லி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆட்கொல்லி என எந்த உத்தரவிலும் தெரிவிக்கப்படவில்லை.

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: எரிபொருள் ஆழ்துளைக்கிணறுகளை மூடுவது தொடர்பாக ஓஎன்ஜிசி அலுவலர்கள் ஆய்வு

Last Updated : Oct 6, 2021, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details