நீலகிரி மாவட்டம் கண்ணம்வயல் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து (65) என்பவர், டிசம்பர் 11ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கடைக்கு செல்லும் வழியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
அதைப் போல கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி பத்தாம் லைன் பகுதியில் டிசம்பர் 13ஆம் தேதி மாலை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பிரகாஷ் (22) என்ற இளைஞரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற பிரகாஷின் தந்தையும் ஊராட்சி கவுன்சிலருமான ஆனந்தராஜையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் தந்தையும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதவாறு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று (டிச.15) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.