நீலகிரி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஃபைசல் அகமது மற்றும் சணர் அகமது ஆகிய 2 தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் ஒரே காரில் நேற்று உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஹைதராபாத்திற்கு செல்ல உதகையிலிருந்து உல்லத்தி வழியாக சென்றுள்ளனர்.
அப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், தாழ்வான மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய 7 மாத கைக்குழந்தை மற்றும் 6 வயது சிறுவன் உட்பட இரு தம்பதியினரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 6 வயது மிக்க சிறுவன் அகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த 2 தம்பதியினருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.