நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு பங்களாவிற்கு, கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு சசிகலா நேற்று மாலை வந்தார். இந்த நிலையில், இன்று காலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை மற்றும் மணிமண்டபம் எழுப்புவதற்கான பூமி பூஜையை சசிகலா செய்தார். முன்னதாக, நிருபர்களிடம் பேசிய சசிகலா, “7-9 வயதில் தனது குழந்தை பருவம் முடிந்து விட்டது எனவும், ஆனால் அந்த நாட்களை எனக்கு திரும்ப ஞாபகப்படுத்துவது இந்த கோடநாடுதான் என ஜெயலலிதா கூறுவார்.
கோடநாடு ஜெயலலிதாவிற்கு பிடித்த இடம். எங்கள் இரண்டு பேர் மீதும் தொழிலாளர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களை நாங்கள் தொழிலாளர்களாக பார்க்கவில்லை, குடும்பமாக பார்த்தோம். ஜெயலலிதா வரும்போது தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்திற்கேச் சென்று பேசுவோம். அது போன்று சகஜமாக ஜெயலலிதா இங்கு வாழ்ந்துள்ளார்.
பொதுவாக குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் கோடநாட்டில் ஜெயலலிதா இருப்பார். வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏன் செல்வதில்லை என கேட்பார், இங்கு கோடநாடு உள்ளது, இதை விட பெரியது எதுவும் இல்லை என்பார் ஜெயலலிதா. அவரின் விருப்பப்பட்ட இடம் இது, அதனால் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது நான் பெங்களூரில் இருந்து வந்த பிறகு நினைத்துக் கொண்டிருந்தேன்.