மனித - விலங்கு மோதலை தடுக்க தனிப்பிரிவு: வனத்துறை அமைச்சர் - elephant
காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையில் புதிதாக ஒரு பிரிவு உருவாக்கப்படும். அந்தக் குழுவினர் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வருவதை தடுத்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீலகிரி: யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பதை தடுக்கவும், குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வன பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையில் புதிதாக தனி பிரிவு உருவாக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு வனத்துறை அமைச்சருமான ராமசந்திரன் கலந்துகொண்டு, அனைத்து துறை அலுவலர்களிடம் கரோனா கட்டுப்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது டிவிஎஸ் அறக்கட்டளை சார்பாக நீலகிரி மாவட்ட சுகாதார துறைக்கு 25 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. ஆக்ஸிஜன் இருப்பு அதிகமாக உள்ளதுடன், சிகிச்சை மையங்களில் கூடுதலாக படுக்கைகள் காலியாக இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு இது வரை கரோனா தடுப்பூசி போடபட்டுள்ளது. இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது என்றார்.
மேலும் அவர், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நீலகிரி, பெரும்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் ஆக்ஸிஜன் உற்பத்தி இந்த 3 மாவட்டங்களிலும் தொடங்கப்படும் என்றார்.