நீலகிரி மாவட்டம், குன்னுார் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை இருந்து வருகிறது. 43.5 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 10 அடி மட்டுமே உள்ளது. இந்த நீர் இரண்டு நாட்களுக்கு மட்டும் பயன்படும் என்பதால் குன்னுார் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அப்பகுதியில் உள்ள மற்ற சிறு தடுப்பணைகள் தூர்வாரப்படாமல் உள்ளதாலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் நீரைத் தேடி நீண்ட தொலைவில் உள்ள நீரோடைகளிலிருந்து வாகனங்கள் மூலமாகக் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். அணையில் நீர் இருக்கும் போதே மாதத்திற்கு 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில் நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.