நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரேஞ்மேடு, ஜெ.கொலகம்பை, சிக்கரசு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதானத் தொழிலாக தேயிலை மற்றும் விவசாயம் இருக்கிறது. கடந்த 50 ஆண்டு காலமாக, ராணுவத்திற்குச் சொந்தமான சாலையை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது கரோனா காரணமாக, ராணுவப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் இந்த சாலையில் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தாங்கள் அறுவடை செய்த தேயிலை மற்றும் காய்கறிகளை தலையில் சுமந்த படி மூன்று கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சாலையின்றி மண் சாலையில் அல்லல் படும் மக்கள் மேலும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால், பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடைப்பாதையை, கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து மண் சாலையாக அமைத்தனர். ஆனால், இதற்கு சில எதிர்ப்புகள் கிளம்பியதால் அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையை நடத்தியதோடு, ஓரிரு நாட்களில் நில அளவீடு செய்து சுமூகமான தீர்வு தெரிவிப்பதாகக் கூறினார். அதன் பின்னரே பொதுமக்கள் அப்போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும் பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:நிவாரண உதவி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!