நீலகிரி:நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்லும் பொருட்களாக நீலகிரி தேயிலை தூள், ஊட்டி வர்க்கி, ஹோம்மேட் சாக்லேட் ஆகியவை இருந்து வருகிறது. இந்த பட்டியலில் முக்கியம் வகிக்கிறது நீலகிரியில் தயாரிக்கப்படும் "நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் ஆயில்”. இந்த “யூகலிப்டஸ் ஆயில்” நாடு முழுவதும் பிரபலமடைந்த ஒன்று.
இந்த யூகலிப்டஸ் நாற்றுகள் ஆங்கிலேயர்களது ஆட்சிக் காலத்தில், 1848 ல் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இவை நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடப்பட்டு வளர்க்கப்பட்டன. இதில், 32 வகை நாற்றுகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும் வளர்க்கப்பட்டன.
யூகலிப்டஸ் ஆயில் தயாரிப்பில், "தைல கொட்டகை” முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கொட்டகை யூகலிப்டஸ் இலைகளால் அமைக்கப்படவை. மரங்களில் பறிக்கப்படும் இலைகள், உதிர்ந்து கிடக்கும் இலைகள் என, இரு வகை இலைகள் மூலம் இந்த தைலம் காய்ச்சப்படுகிறது.
சுமார் 400 கிலோ இலைகளைக் காய்ச்சும் கொள்ளளவு கொண்ட டிரம்கள், அடுப்பு, குழாய்கள் என அனைத்து வித உட்கட்டமைப்புகளையும் கொண்ட தைலம் தயாரிப்பு கொட்டகை, வீடுகளைப் போல் தோற்றம் கொண்டது. இதனுள்ளே எப்போதும் தைல வாசனையும் இருக்கும். இந்த கொட்டகைக்குள் குறைந்த பட்சம் 22 டிகிரி செல்சியல் வெப்ப நிலையும் நிலவும்.
கடந்த 45 ஆண்டுகளாக நீலகிரி தைலம் தயாரித்து வரும் உண்ணி கிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில், “முதலில் இலைகளை டிரம்களில் போட்டு, காய்ந்த இலை, பச்சை இலை என இருவகை இலைகளுக்கு ஏற்ப தேவையான அளவு நீரை ஊற்றி வேக வைப்போம்.
வேகவைத்ததால் வெளியேறும் ஆவி, டிரம்களில் இணைக்கப்பட்டுள்ள குழாய் வழியே கீழ்ப் பகுதியில் உள்ள தொட்டியில் நீராகக் கொட்டும். அந்த நீரில் அடர்த்தி குறைவான தைலம் மிதக்கும். நீரானது, கீழ்ப் பகுதிக்குச் சென்று வெளியேறும்.எஞ்சிய தைலத்தை எடுத்து வடிகட்டி, சுத்திகரிப்பு செய்து விற்பனைக்குத் தயார் செய்வோம். இதில், மூன்று விதமான பணிகளை நுட்பமாகச் செய்தால்தான், தரமான தைலம் கிடைக்கும்,'' என்றார்.