தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி இன்று முதுமலை வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. நீலகிரியில் மாற்றங்கள் என்ன? - நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குச் செல்ல உள்ளதால், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Mudumalai security
முதுமலை பாதுகாப்பு

By

Published : Apr 8, 2023, 9:20 PM IST

Updated : Apr 9, 2023, 6:36 AM IST

முதுமலை பாதுகாப்பு

நீலகிரி:முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இன்று (ஏப்ரல் 9) காலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்ல உள்ளார். அங்கு யானை பாகன்களுடன் உரையாடும் பிரதமர் பின்னர் யானைகளுக்கு உணவளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள 52 புலிகள் காப்பகங்களில் இருந்து வந்துள்ள 12 கள இயக்குநர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் - பெல்லி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் செல்லும் யானைகள் முகாமை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகள் முகாமில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக மசினகுடி சாலை வழியாக பிரதமர் செல்ல உள்ளதால், அங்குள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தெப்பக்காடு சாலை வரை மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். முதுமலையில் இருந்து சாலை வழியாக பிரதமர் செல்லும் தெப்பக்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால், சாலை முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (ஏப்ரல் 8) மாலை 4 மணி முதல் முதுமலையைச் சுற்றியுள்ள தொரப்பள்ளி, கர்நாடக மாநில எல்லையில் உள்ள கக்கன் நல்ல சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதுமலை யானைகள் முகாமில் நிகழ்ச்சி முடிந்து பிரதமர் செல்லும் வரை வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வன சோதனைச்சாவடி வழியாக பொது மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல இன்று காலை 10.30 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கக்கநள்ளா மற்றும் தொரப்பள்ளி ஆகிய வன சோதனைச்சாவடிகள் வழியாகவும் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலம் செல்லவும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவும் மாற்று பாதையாக கூடலூர் - தேவர்சோலை - பாட்ட வயல், சுல்தான் பத்தேரி வழித்தடத்தை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று துவக்கி வைக்கப்பட்ட 3 புதிய ரயில் சேவைகள் விபரம்!

Last Updated : Apr 9, 2023, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details