நீலகிரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகள் நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நிலக்கரியை எரிபாெருளாக கொண்டு இயங்கி வந்த மலை ரயிலால் நீலகிரியின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக கருத்து இருந்து வந்த நிலையில் நிலக்கரிக்கு மாற்றாக பர்னஸ் ஆயிலை எரி பொருளாக கொண்டு நீராவி மூலம் மலை ரயில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக இயக்கப்பட்டது.
ஆனாலும் இதிலும் நாளடைவில் புகை அதிக அளவு வந்தால் சுற்றுச்சூழல் தாெடர்ந்து பாதிக்கப்பட்டது, இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி நீராவி மூலம் இயங்கும் மலை ரயில் என்ஜின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
9 கோடியே 30 லட்சம் மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி நிறைவடைந்து, கடந்த 5 ஆம் தேதி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ட்ரெய்லர் லாரி மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது.