முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 25 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு முன்னதாக முகாமிலுள்ள யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, பின் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
பின்னர், முகாமிலுள்ள உணவு கூடத்திற்கு யானைகள் அழைத்துவரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. அப்போது கிருஷ்ணா என்ற யானை மட்டும் அங்குள்ள விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அந்த யானை தனது தும்பிக்கையில் மணியைப் பிடித்துக் கொண்டு அதனை அடித்தவாறு மூன்று முறை கோயிலைச் சுற்றிவந்தது.