உதகை:நாட்டையே உலுக்கிய குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர். இதில் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று (டிசம்பர் 9) பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த நிலையில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், ராணுவ அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறந்தவர்களின் உடல்கள் கோவை சூலூர் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டுசெல்லப்பட்டது.
அதிநவீன கேமரா கொண்டு விசாரணை
இந்நிலையில், ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காவல் துறையிடம் கிடைத்துள்ளது. அதனை, விமானப்படைத் தளபதி வி.பி. சௌத்திரியிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்த விசாரனை நடத்த நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முத்து மாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் குன்னூர் காவல் துறையினர் - பிபின் ராவத் உள்ளிட்டோரின் மரணம் குறித்து - பிரிவு 174, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்றே விசாரிக்கக் குழு அமைத்துள்ளதாகவும், அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல் துறை சார்பில் அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் சம்பவ இடங்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க:ரூ.100 கோடி நஷ்டஈடு: தோனி தொடர்ந்த வழக்கு 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!