கோயம்புத்தூர்: தமிழ்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ( ஏப்.08 ) சென்னை வந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நரேந்திர மோடி, இன்று ( ஏப்ரல் 9 ) நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்குச் சென்றார். அங்கு வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை ஊட்டி மகிழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற "The Elephant Whisperers" ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து உரையாடினார். மேலும், மூத்த யானைப் பாகன்கள் மற்றும் T 23 புலியை பிடித்த வனக் குழுவினரிடமும் கலந்துரையாடினார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து யானை பராமரிப்பாளர் பெள்ளி கூறுகையில், "பிரதமர் மோடி யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார். யானைகளை நன்றாக வளர்த்திருப்பதாக எங்களை பாராட்டினார். பின்னர், மீண்டும் எங்களை அழைத்து என்ன உதவி வேண்டும் என கேட்டார். அவரிடம் நிறைய கோரிக்கைகள் இருக்கு என கூறினோம்.
சாலை வசதி இல்லை, சரியான வீடு இல்லை, மின்வசதி இல்லை என்றோம். மழைக் காலங்களில் ஏற்படும் சிரமங்களையும் எடுத்துரைத்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் நேரில் சென்று ‘மனு கொடுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நான் அறிவுறுத்துகிறேன்’ என்றார். யானையுடன் நானும் என் கணவரும் இருக்கும் படத்தை பிரதமரிடம் கொடுத்தோம். அதை வாங்கிக் கொண்ட அவர், எங்களை டெல்லி வருமாறு அழைத்தார். பிரதமரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, T 23 புலியை பிடித்த குழுவில் இருந்த வனக் காவலர் காலன் பேசுகையில், "தெப்பக்காடு வனப்பகுதியில் 18 வருடமாக பணியாற்றி வருகிறேன். T 23 புலியை பிடித்ததற்கு விருது வாங்கிய குழுவினரை, பிரதமர் மோடி சந்தித்தார். எங்கள் குழுவில் இருந்து 3 பேர் சென்றோம். அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்ன பணிகள் செய்வீர்கள் என கேட்டார். புலி, யானை உட்பட வன விலங்குகளை டிராக் செய்வது உட்பட பணிகளை நாங்கள் செய்வோம் என விளக்கி கூறினோம்.
பிரதமருடன் நிறைய அதிகாரிகள் துப்பாக்கியுடன் வந்தவுடன் பயமாகி விட்டது. இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே பிரதமரை பார்த்த நிலையில், நேரடியாக அவரை பார்த்தபோது என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், எங்களிடம் இயல்பாக கை கொடுத்து பிரதமர் பேசினார்" என்றார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் - ஓபிஎஸ்சை பிரதமர் சந்திப்பதில் நீடித்த சிக்கல் - முழுப் பின்னணி என்ன?