நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இதனால் உதகைக்கு தினந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யபட்டுள்ள பிளாஸ்டிக்கை எடுத்து வருவதுடன் சுற்றுலா தலங்களிலும் வீசிச் செல்கின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக்கை எடுத்து வருவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்த விழிப்புண்ர்வு!
நீலகிரி: கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யபட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
இதனையடுத்து, சுற்றுலா பயணிகளிடையே பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த விதிக்கபட்டுள்ள தடை குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் தாவரவியல் பூங்கா இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது, பூங்காவைக் காண வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர்கள் வழங்கினர்.