நீலகிரிமாவட்டம் உதகை அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உதகை நகரின் 200 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ்நாடு அமைச்சர்கள் ராமச்சந்திரன்,வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், 9,422 பயனாளிகளுக்கு 28 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இதன் பின்னர் உரையாற்றிய முலமைச்சர், நல்லா இருக்கீங்களா? என படுகு மொழியில் "ஒல்லகித்தீரா" எனவும், தோடர் மொழியில் "உல்திஸ்யா" எனவும் கேட்டுப் பேசத் தொடங்கினார். அவர் மேலும் பேசுகையில், “பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கும் உதகைக்கு நான் வந்துள்ளேன். இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
தொழிலதிபர்களுடன் ஆலோசனை கூட்டம்: வாழ்க்கையில் எத்தனையோ முறை நீலகிரிக்கு வந்திருந்தாலும், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு தற்போது வந்திருக்கிறேன். ஊட்டியைப் போலவே எனது மனதும் குளிர்ச்சியாக உள்ளது. தமிழகம் பூந்தோட்டம் என்று கலைஞர் கூறுவார். அதில் அழகான நீலகிரி மாவட்டம் விளங்குகிறது.
யுனஸ்கோ உயிர்க்கோள் காப்பகமாக அமைத்துள்ளது. அந்த இடத்தில் இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று நாள்களாக இந்த மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கோவையில் தொல்பொருள் கண்காட்சி, ஓராண்டு சாதனை விளக்கம், செய்தித் துறை கண்காட்சியைத் தொடங்கி வைத்த நான், கொங்கு மண்டல தொழிலதிபர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.
அதில் நான் மட்டும் பேசி அவர்கள் கேட்பதாக இல்லாமல், வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களை பேச வைத்து அவர்களிடமே ஆலோசனைகளைப் பெற்று இந்த அரசின் மீது அவர்கள் நம்பிக்கையுடன் வைத்திருக்கின்றனர் என்பதை அறிந்தேன். அதன் பிறகு நீலகிரிமக்கள் தந்த வரவேற்பு என்னை இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளை ஊக்கப்படுத்தியுள்ளது.
தேயிலை தோட்டக்கழகம்: இதற்கிடையில், இந்த 124 வது மலர்க் கண்காட்சி, முப்படை பயிற்சி சிறப்பான மரியாதை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்த விழா. இந்த மாவட்டத்தில் அடிக்கல் நாட்டு, திறப்பு விழா, 9500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அனைத்தும் மிகப்பெரிய அளவில் நடக்கிறது.
குழுமியுள்ள கூட்டம் அரசு விழாவா அல்லது மாநாடா என்று சந்தேகம் வரும் அளவுக்கு எழுச்சியைக் காண்கிறேன். திமுக அரசு அமையும்போதெல்லாம், நீலகிரிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கருணாநிதி சாதனையில் ஒன்று பேருந்துகளை தேசிய மயமாக்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தை இங்குதான் அவர் தொடங்கி வைத்தார்.
சுற்றுலா வளர்ச்சிக் கழக மாளிகை கட்ட நிதி ஒதுக்கீடு, முதுமலை சரணாலய விரிவாக்கம் குறித்த விரிவான திட்டம், உள்நாட்டுப் போரில் இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்பதால் 1970 கூடலூர், கோத்தகிரி தாலுகாவில் அமர்த்தி அழகுபார்த்தவர், கருணாநிதி. அவர்களின் வாழ்வாதாரத்துக்காக தேயிலை தோட்டக் கழகம் ஏற்படுத்தினார். அதனை உதகையில் இலவசமாகவும் கட்டிக் கொடுத்தார்.
2009 நிலச்சரிவு: 2008 ல் தேயிலை தொழிலாளர் சம்பள உயர்வு 90 ரூபாய் வேண்டுமெனக் கேட்டனர். ஆனால், 105 ரூபாயாக ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டார் கருணாநிதி. பெரும்பான்மையாக வாழும் பிரிவாக இருக்கும் தோடர் சமூகத்தினர் பிசி பிரிவில் இருந்து எம்பிசி பிரிவிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றியவர், கருணாநிதி.
தேயிலை விவசாயிகளுக்கு மானியம், பழங்குடி மக்கள் குடியிருப்புக்கு மின் இணைப்பு, இலவச டிவி வழங்கியவர் கருணாநிதி. கூடலூரில் உள்ள 30,000 வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தவர். நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது கடை வியாபாரிகளுக்கு நீட்டிப்பு உரிமம், அனுமதி வழங்கினேன்.