நீலகிரி:கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதலான விசாரணை காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கையும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், கோடநாடு கொள்ளை சதி திட்டம் குறித்து தனபாலுக்குத் தெரிந்திருந்த நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை விவகாரம் குறித்து தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் சாலை விபத்தின் போது அவரின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தனிபடை காவல் துறையினர் தனபால், உறவினர் ரமேஷை கடந்த 25ஆம் தேதி சேலத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.