மசினகுடி பகுதியில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக மசினக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்களை மாவட்ட சுகாதாரத் துறை பணி அமர்த்தியுள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்களின் பிரசவத்திற்கு தனி மருத்துவ மையமும் செயல்பட்டுவருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் இருந்த ஈ.சி.ஜி இயந்திரம் உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தன. எனினும், பல மாதங்களாக இந்த பழுதுகள் சரிசெய்யப்படாமல் இருந்ததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவந்தனர்.
இதனையடுத்து மசினகுடி பொதுமக்கள் சார்பாக, சுகாதார நிலையத்திற்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கி நன்கொடையாக அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணியில் மசினகுடி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஈடுபட்டுவந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தாமாகவே முன் வந்து சுமார் 1.5 லட்சம் ரூபாயை அளித்தனர்.