நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில் கடந்த 25 நாள்களாகக் காட்டு யானைகள் அவ்வப்போது கடைகள், வீடுகளைத் தாக்குவதுடன் உணவுப் பொருள்களைச் சேதப்படுத்தியது. இந்நிலையில், கக்காச்சி, மேல் பாரத்நகர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள், வாழை மரங்கள், மேரக்காய் செடிகளைத் தொடர்ந்து நாசப்படுத்திவருகிறது. இதேபோன்று அதிகாலையில் கக்காச்சி கிராமத்தில் குடியிருப்பையும் சேதப்படுத்தியது.
இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, இப்பகுதியில் உள்ள மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த வனத் துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.