நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆற்றினை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி குன்னூர் ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு மாற்று வீடு திட்டத்தின்படி கேத்தி அருகே உள்ள பிராகசபுரம் பகுதியில் 172 மாற்று வீடு கட்டப்பட்டு அதனை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் குன்னூர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்புக் கருதி சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர். கண்ணிமாரியம்மன் கோவில், எம்ஜிஆர் குப்பம், சித்தி விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகள் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு மாற்று வீடு வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கான ஆய்வுகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் 87 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கத் தயார்செய்து முதற்கட்டமாக 16 வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதற்குள் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து வெலிங்டன் காவல்துறை ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து வட்டாட்ச்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட போவதாக தெரிவித்தனர்.