நீலகிரி மாவட்டம் சீகூர் சமவெளி பகுதியில் உள்ள பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா உள்ளிட்ட சில கிராமங்கள் யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாகவும், அதில் சிலர் விதிமீறி தனியார் தங்கும் விடுதிகளை நடத்திவருவதாகவும் 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் காலிசெய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், யானை வழித்தடத்தில் உள்ள பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் செயல்பட்டுவந்த விதிமீறிய தனியார் விடுதிகளைச் சீல்வைக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 38 தனியார் விடுதிகளுக்குச் சீல்வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தனியார் விடுதி உரிமையாளர்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகம் யானை வழித்தடம் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். பின்னர், யானை வழித்தடப் பிரச்சினையை நேரில் ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இக்குழு முதற்கட்டமாக யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் விடுதி உரிமையாளர்கள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்துவருவதற்கான ஆதாரங்களைப் பிரமாண பத்திரமாகத் தாக்கல்செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியது. பின்பு பிரமாண பத்திரம் தாக்கல்செய்ய உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் அலுவலகமும் திறக்கப்பட்டது.
சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடத்தில் வசிக்கும் மக்கள் தற்போது, மூன்று மாத கால அவகாசம் நேற்று (பிப். 14) மாலையுடன் நிறைவடைந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பிரமாண பத்திரத்தைத் தாக்கல்செய்தனர்.
இதையும் படிங்க:’வேலைவாய்ப்பு, தொழில் முதலீடுகள் இல்லாமல் தமிழ்நாடு எவ்வாறு வெற்றி நடைபோடும்’: கனிமொழி கேள்வி