கரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடபட்டன. தற்போது இந்த சுற்றுலா தலங்கள் படிப்படியாக திறக்கபட்டதோடு, சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று (டிச.07) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவின் உயரமான மலை சிகரம் என்று அழைக்கப்படும் தொட்டபெட்டா காட்சிமுனை 8 மாதங்களுக்கு பின் திறக்கபட்டது.
இதனையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொட்டபெட்டா காட்சிமுனை பகுதியில் மேற்கொள்ளபட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா துறை, வனத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கபட்டுள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.
8 மாதங்களுக்கு பின் தொட்டபெட்டா திறக்கபட்ட நிலையில் கடும் மேகமூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொட்டபெட்டாவை காண அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:குன்னுாரில் தனியார் மலை ரயில் இன்று முதல் தொடக்கம்