நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி தோட்டக்கலை பண்ணையில் நாற்று, இயற்கை உரங்களான மண்புழு உரம், பஞ்சகவியா, தசகவியா உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிர் உரங்கள் ஆகியவை உற்பதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு 500 கிலோ டிரைகோடெர்மா, 3 ஆயிரம் கிலோ பேசில்லஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், தலா 1,000 கிலோ அளவிலான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.