உதகை அருகே உள்ள அவலாஞ்சி வனப் பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சிறந்த சுற்றுலாதலம் என்பதால் தினந்தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
வெள்ளை நிற புலிகள் காட்சி இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அவலாஞ்சி பகுதிக்கு சென்ற பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞர் 2 வெள்ளை புலிகளை பார்த்து புகைப்படம் எடுத்தார். மேலும் அந்தப் புகைப்படங்களை வனத்துறையினரிடம் வழங்கினார்.
அதனைக் கண்டு வியப்படைந்த வனத்துறையினர், அந்த புலிகளை காண 15க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர். அதில் புகைப்பட கலைஞர் காட்டிய 2 வெள்ளை புலிகள் உள்பட 4 புலிகள் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.
அதன் பிறகு அந்த வெள்ளை புலிகளை கண்காணிக்க வனத்துறையினர் கேமராக்களை தொடர்ந்து பொருத்திய நிலையில், அந்தப் புலிகள் நடமாட்டம் பதிவாகவில்லை. இதனையடுத்து புலிகள் வேறு வன பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று நினைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (மார்ச்2) மதியம் 2 வெள்ளை புலிகளும் அவலாஞ்சி மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கு அருகே நடந்து வந்துள்ளன. அதனை அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து வியப்படைந்ததுடன் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.
வெள்ளை நிற புலிகள் காட்சி தொழிலாளர்களை கண்ட 2 வெள்ளை புலிகளும் உடனடியாக வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா அவலாஞ்சி பகுதிக்கு சென்று புலிகள் நடமாட்டத்தை கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி