நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக் பயன்படுத்த முழு தடை விதித்துள்ளார். அதனை கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கபட்டுள்ளன. இதனால் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை! - நீலகிரி
நீலகிரி: ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதற்கு மாற்று ஏற்பாடாக உதகை தாவரவியல் பூங்கா உட்பட முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீர் ஏ.டி.எம்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவிலான தண்ணீர் பாட்டில்களை சாலை ஓரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன்படி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.