நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை வனச் சரணாலயம் முதுமலை புலிகள் காப்பகமாக பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்திற்கு முன்பு பல தலைமுறைகளாக முதுமலை ஊராட்சிக்குட்பட்ட பெண்ணை முதுகுலி, காரக்கொல்லி , போஸ்பாரா, செம்பங்கொல்லி, நாகம் பல்லி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர்.
இஞ்சி, பாக்கு, வாழை, நெல் ஆகியவை அவர்களது பிரதானத் தொழிலாக இருந்தது. முதுமலை புலிகள் காப்பகம் பெயர் மாற்றத்திற்குப் பிறகு அங்கு வசித்து வந்த மக்கள் வனத்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கு இடமும், அவர்களது வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சமும் தருவதாக வாக்குறுதியளித்து மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கியது.
இதற்காக வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஒரு வழக்குரைஞர் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, 5 வருடங்களாக அங்கு வசித்து வரும் பழங்குடியினர், மவுண்டாடன் செட்டி சமுதாயம், வயநாடு செட்டி சமுதாய மக்களிடம் குறைகளை ஆவணமாகப் பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து இரண்டு கட்டமாக வெளியேற்றப்பட்ட மக்களை அந்தக் குழு, பிற அரசு அலுவலர்களுடன் சேர்ந்துகொண்டு அரசு ஒதுக்கிய நிதியில் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய இடங்கள், வீடுகள் கட்டுவதில் தேர்வு செய்வதிலும் பல கோடி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது மோசடி செய்த அலுவலர்கள் மீது அம்மக்கள் புகார் செய்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெளியேற்றப்பட்ட மக்களுக்கு எந்தவித அரசு உதவியும் வந்து சேரவில்லை. மேலும், அவர்களது வங்கிக் கணக்கில் பல கோடி கணக்கில் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.