மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, பைக்காரா உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல வாடகைக் கார்கள் இயங்கிவருகின்றன.
வாடகைக் கார் தொழிலை நம்பி ஏராளமானோர் இருந்துவரும் நிலையில் சமீப காலங்களாக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா வழிகாட்டி என்று கூறிக்கொண்டு பலர் ஏமாற்றி வருவதாகவும் அதில் சிலர் பெரிய டிராவல்ஸ்களுக்குச் சொந்தமான வேன்கள், பேருந்துகளில் தரகுத் தொகையை பெற்றுக்கொண்டு அனுப்பிவைப்பதாகவும் புகார் எழுந்துவருகிறது.