தமிழ்நாட்டில் வன பரப்பை அதிகரிக்கும் விதமாக சமீப காலமாக வன பகுதிகளில் விதை பந்துகள் வீசபட்டு வருகிறது. இச்சூழலில் காய்கறிகளையும் விதை பந்து முறையில் சாகுபடி செய்யும் திட்டம் முதன்முறையாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இத்திட்டத்தை உதகை அரசு தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் செய்துள்ளனர். முதற்கட்டமாக பீன்ஸ், அவரை போன்ற காய்கறி விதைகள் இயற்கை உர மண்ணிற்குள் வைத்து பந்து போன்று மாற்றப்படுகிறது. இரண்டு நாட்கள் அந்த விதைப் பந்துகள் ஒரே இடத்தில் வைக்கபட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த விதைப் பந்தை வாங்கிச் சென்று வீட்டின் மாடி தோட்டம், வீடு தோட்டத்தில் போடுவதன் மூலம் காய்கறி விளைவிக்க முடியும். குறிப்பாக இயற்கை வேளாண் முறையில் காய்கறிகளை விளைவிக்க முடியும். இந்த முறைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு விதை பந்து 2 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விதை பந்து வழங்கும் திட்டம் குறிப்பாக கரோனா ஊரடங்கு முடிந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதை பந்துகள் விற்பனை செய்யவும் தாவரவியல் பூங்கா திட்டமிட்டுள்ளது. இதை பொதுமக்களும் தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் பெற்று பயன்பெறுமாறு தோட்டகலைத் துறை அறிவித்துள்ளது.