நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி வனச்சரகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மதம் பிடித்த நிலையில் சுற்றித்திரிந்த யானை, தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக அடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் எனப் பெயரிடப்பட்ட அந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அந்த யானை தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து கேரளாவுக்கு சென்றதால், யானையை பிடிக்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில் ஆட்கொல்லி யானையான சங்கர் கேரளாவில் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகளை இடித்து நாசம் செய்து மீண்டும் ஏழு நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சங்கரை பிடிக்க முதுமலையிலிருந்து விஜய், சுஜய், பொம்மன், முதுமலை ஆகிய நான்கு கும்கி யானைகளும் பொள்ளாச்சி டாப்சிலிப்பிலிருந்து கலீம் என்ற கும்கி யானையும் வரவழைக்கபட்டுள்ளன.