நீலகிரி: இந்தியாவில் முதல்முறையாக, நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் உதகை அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி முப்சினா துனிசா. இவர் அந்த நுண்ணுயிரிக்கு பயோனிச்சிரஸ் தமிழிலான்ஸிஸ் என்ற பெயர் சூட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலை கல்லூரியில் உள்ள மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகத்தில், நுண்ணுயிரிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இங்கு ஏற்கனவே 5 வகையான புதிய நுண்ணுயிரிகள் கண்டுப்பிடிக்கபட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு நுண்ணுயிரி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மண்ணின் தரம் உயர்த்தும் நுண்ணுயிரி
இந்த நுண்ணுயிரியை, அரசு கலை கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி மாணவி முப்சினா துனிசா கண்டறிந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த ஆராய்ச்சியை செய்துவருகிறார்.
நீலகிரி மாவட்டம் பாட்டவயலைச் சேர்ந்த இவர் கண்டறிந்த புதிய நுண்ணுயிரி, செழிப்பான புல்வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்கச் செய்து, மண்ணை தரம் வாய்ந்த உரமாக மாற்றும். பாக்டீரியா போன்ற கிருமிகள் ஜீரணிக்க முடியாத காளான் கழிவுகளையும், இந்த நுண்ணுயிரிகள் செரிக்கும் திறன் படைத்தவை.
நெடுநாள் உழைப்புக்கு கிடைத்த பலன்
இவர் 2018-ஆம் ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் பயிலும் அரசு கல்லூரி அருகே மண்ணுக்கடியில் ஒரு மண் பூச்சியைக் கண்டுபிடித்துள்ளார். 1 மில்லி மீட்டருக்கும் குறைவாக, நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக்கூடிய இந்த மண் பூச்சி, பயோ நிக்கோரஸ் என்ற பேரினத்தைச் சேர்ந்தது.