நீலகிரி மாவட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா. 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
புகழ்பெற்ற இந்தப் பூங்காவை உருவாக்கும் பணியை 1843ஆம் ஆண்டு மெக்ஐவர் என்பவர் தொடங்கிவைத்துள்ளார். பூங்கா உருவாக்கும் பணி 1867ஆம் ஆண்டு நிறைவடைந்து பூங்கா திறக்கப்பட்டது. அப்போது பல்வேறு நாடுகளைச் சார்ந்த மரங்களும், மலர் செடிகளும் கொண்டு வரப்பட்டு நடப்பட்டன. இந்தப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் 1876ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.