உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் ஜிம்கானா எனப்படும் 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோல்ஃப் கிளப் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து செயல்பட்டு வரும் இந்த கோல்ஃப் கிளப் நிர்வாகம் 78 ஹெக்டர் நிலத்தை நீலகிரி மாவட்ட வனத்துறையிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, அதில் கோல்ஃப் மைதானம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
ஒப்பந்தம் முடிந்த நிலையில், இதுவரை அந்த கிளப் நிர்வாகம் வனத்துறைக்கு 57 கோடி ரூபாயையும், வருவாய்த்துறைக்கு 15 கோடி ரூபாயையும் குத்தகை பாக்கி வைத்துள்ளது.
இதுகுறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கோல்ஃப் கிளப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 34 ஹெக்டர் நிலத்தை, கையகப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோல்ஃப் கிளப் நிர்வாகம் 34 ஹெக்டர் நிலத்தை நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலாவிடம் ஒப்படைத்தனர்.