ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளுடன் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முழுமையான முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் உதகை அருகே உள்ள கடநாடு ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுயச்சை வேட்பாளர் மேனகாவுக்கும் அதிமுக கட்சியைச் சார்ந்த சங்கீதாவிற்கும் கடும் போட்டி நிலவியது.
கடநாட்டில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை ஜனவரி இரண்டாம் தேதி நண்பகல் ஒரு மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவில் மேனகா, சங்கீதாவை விட ஆறு ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த சங்கீதா மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரினார். இதனால் அன்றிரவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதிமுகவைச் சார்ந்த சங்கீதா, மேனகாவை விட மூன்று வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானது.
வேட்பாளர் மேனகாவின் கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேனகா தரப்பினர், உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாக்காளர் அடையாள அட்டைகளுடன் வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். மேலும் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவைச் சந்தித்து மனு அளித்ததோடு, இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் புகார் மனு அளிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் அதிமுக, திமுக இடையே மோதல்!